செவ்வாய், 17 டிசம்பர், 2013

காஞ்சி மாவட்டம்- தீட்டாளம் ஊராட்சி- சுடுகாடு அமைத்ததில் தீண்டாமை.

இன்று 15-12-2013 காலை காஞ்சிபுரத்தில் இருந்து கோழியாளம் தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் நினைவு மணிமண்டபத்தில் நான் சார்ந்திருக்கின்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நமது தமிழ்மண் வாசகர் வட்ட கூட்டத்திற்கு நானும் தம்பி சந்துரு அவர்களும் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தோம்.

தாத்தா பிறந்த கோழியாளம் ஊராட்சிக்கு முன்பு உள்ளது தீட்டாளம் ஊராட்சி.

இந்த ஊராட்சியில் இரண்டு சுடுகாடுகள் ஒன்று உயர்சாதியினருக்கு. மற்றொன்று தாழ்த்தப்பட்டோருக்கு.






சுடுகாடு அமைத்த ஊராட்சி நிர்வாகம் அல்லது அச்சிறுப்பாக்கம் ஒன்றிய நிர்வாகம் சுடுகாட்டின் சுற்றுசுவரில் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் இது கட்டி முடிக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.

இதில் கேவலமான செய்தி என்னவென்றால் ஊர்த்தெரு உயர்சாதியினரின் சுடுகாட்டு சுற்றுசுவரில் கிராம சுடுகாடு அமைத்தல் என்றும் தாழ்த்தப்பட்டோருக்கான சுடுகாட்டின் சுற்றுசுவரில் காலனி சுடுகாடு அமைத்தல் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதுவும் தீண்டாமையின் வடிவம் தானே.

ஆளுகின்ற அரசு தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்று சொல்லிக்கொண்டே மறைமுகமாக தீண்டாமையை கடைபிடிக்கின்றது.

ஊருக்கும் சேரிக்கும் தனித்தனி சுடுகாடு என்பதே இப்போதும் தீண்டாமை இருப்பதை உணர்த்துகிறது. இருந்தாலும் ஊர்த்தெரு காரனுக்கு கிராம சுடுகாடாம். சேரிக்காரன் என்ன மாநகரத்திலா வாழ்கிறான். இவனது சுடுகாட்டிற்கு காலனி சுடுகாடு என்று எழுதி வைத்திருப்பது ஆளுகின்ற அரசுகளின் சாதி ஆதிக்கத்தை தானே வெளிப்படுத்துகிறது.

சட்டம் பயின்று கொண்டிருக்கின்ற தம்பி சந்துரு என்னிடம்..

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு முன்பே பிறந்து சாதி ஒழிப்புக் களத்தினில் போராடிய நமது தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த ஊருக்கு அருகிலேயே தீண்டாமை நிலவுவது, இந்த ஆளுகின்ற அரசுகளின் இயலாமையையும், உயர்சாதி ஆதிக்க வர்கத்தினருக்கு அரசுகள் துணை போகிறதே, இன்னும் எத்தனை காலங்கள் தான் மக்களை ஏமாற்றுவார்களோ.? என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

மாவட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்போம் தோழர்களே...


புகைப்படங்களுக்கு கீழே சொடுக்கவும்.
https://www.facebook.com/media/set/?set=a.758362824178840.1073741829.100000153891651&type=1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக