செவ்வாய், 17 டிசம்பர், 2013

மாவீரன் - தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் நினைவு மணிமண்டபம்.

கோழியாளம் கிராமம்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கிராமம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து இம்மண்ணில் சாதித் தீண்டாமைகளை எதிர்த்து போராடிய மாவீரன் - தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் பிறந்த கிராமம். காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ளது கோழியாளம் கிராமம்.




தாத்தா பிறந்த இந்த கிராமத்தை, இம்மண்ணை புனிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தாத்தாவின் புகழை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் அவர் பிறந்த கோழியாளம் கிராமத்தில் தாத்தாவிற்கு ஒரு நினைவு மணிமண்டபம் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் தீவிரமான தொடர்க் களப்பணியால் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரின் சீரிய முயற்சியினாலும் கடுமையான உழைப்பினாலும் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவு மணிமண்டபத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகமும், பண்டிதர் அயோத்திதாசர் நூலகமும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களால் திறக்கப்பட்டு திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
 

மணிமண்டபத்தினுள் நுழைந்ததும் தாத்தாவின் மார்பளவு சிலையும், தாத்தா நினைவு தூணும் நம்மை வரவேற்கின்றன.

மணிமண்டபத்தின் உள்ளே தலித் மக்களின் உரிமைகளுக்காக சாதித் தீண்டாமைகளை எதிர்த்து களமாடிய அனைத்து தலைவர்களின் படமும் வைக்கப்பட்டுள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகத்தினுள் பொதுமக்கள் படிக்க நாற்காலிகள், மேசைகள் உள்ளன. பாடங்கள் சொல்லித்தர வசதியாக கருமபலகைகள் உள்ளன. எண்ணற்ற புத்தகங்கள் மரக்கட்டைகளால் செயப்பட்ட அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு கோழியாளம் கிராமத்தைச் சார்ந்த சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியோர்கள் என அனைத்து பொதுமக்களும் தாத்தா நினைவு மணிமண்டபத்தில் அமையப்பெற்றுள்ள பண்டிதர் அயோத்திதாசர் நூலகத்தில் படித்து பயன்பெற்று வருகின்றனர்.

மணிமண்டபத்தின் எதிரில் கோழியாளம் ஏரி உள்ளது. வெளிப்புறத்தில் சிறு தோட்டம் அமைக்கப்பட்டு, ஒரு நீர்த்தேக்கத் தொட்டியும் அமைத்து அதன் மூலம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு பச்சைப் பசேலென செடிகள் வளர்க்கப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. மணிமண்டபபத்திற்கு இரவு காவலர் ஒருவரை நியமனம் செய்து பராமரித்து வருகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோழியாளம் கிராமத்தில் நமக்காக சாதி ஒழிப்புக் களத்தினில் போராடிய மாவீரன் - தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு அவர் பிறந்த மண்ணிலேயே ஒரு நினைவு மணிமண்டபம் அமைத்து அதில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் படிப்பகமும், பண்டிதர் அயோத்திதாசர் பெயரில் நூலகமும் அமைக்கப்பட்டு தாத்தா பிறந்த கோழியாளம் மண்ணை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் புனிதப்படுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறப்பு வாய்ந்த மணிமண்டபம் கட்டாயம் அனைத்து பொதுமக்களும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு விடுதலைச்சிறுத்தைகளும் அவசியம் பார்க்க வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நமது தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் நினைவு மணிமண்டபத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகமும், பண்டிதர் அயோத்திதாசர் நூலகமும் அமைத்து மிக நேர்த்தியாக இதனைத் தொடர்ந்து பராமரித்து செயல்படுத்தி, தாத்தாவைப் பற்றிய அறிதல் மூலம் சாதியத்தின் கொடுமையை இன்றைய இளைய தலைமுறையினரும், நமக்கு அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமை அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும், அதன் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோழியாளம் வாருங்கள் தோழர்களே..
தாத்தா புகழைப் போற்றுவோம்...
அவர் பிறந்த இம்மண்ணை புனிதப்படுத்துவோம்...


புகைப்படங்களுக்கு கீழே சொடுக்கவும்..
https://www.facebook.com/media/set/?set=a.759311594083963.1073741830.100000153891651&type=1.
-----------------------------------------------------------------------
அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்தியல் களப்பணியில்..

பருத்திகுளம் மதி.ஆதவன்,
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக